Monday, November 26, 2007

பொல்லாதவன் - சினிமா விமர்சனம்

எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை மீட்க அவன் போராடுவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் கதை.

வேலை வெட்டி இல்லாத நடுத்தர குடும்பத்து இளைஞனாக வரும் தனுஷ், அந்த பருவத்துக்கே உரிய குணத்துடன் வலம் வருகிறார். நண்பர்களுடன் சேர்த்து குடிப்பது, காதலி பின்னால் அலைவது, தந்தையில் பையில் பணம் திருடுவது என அப்படியே பிரதிபலிக்கிறார். ஏதாவது தொழில் செய்து பிழைத்துகொள்ளும்படி அப்பா கொடுத்த பணத்தில், தனது கனவு வாகனமாக பைக் வாங்குகிறார்.

நீண்டநாள் கனவான வேலை, அவரை தேடி வருகிறது. வாழ்நாள் கனவான காதல் கைகூடுகிறது. திடீரென வில்லனின் தம்பி அந்த பைக்கை திருடி சென்றுவிட, தனுஷின் கனவுகள் அத்தனையும் கலைகின்றன. அதுவரை நல்லவனாக இருந்த தனுஷ், பைக்கை மீட்பதற்காக பொல்லாதவனாக மாறி எதிரிகளை துவசம் செய்வது கதை.அவரது பைக் கிடைத்ததா, காதல் வென்றதா என்பது கிளைமாக்ஸ்.

நடுத்தர குடும்பத்தில் பொறுப்பில்லாத பையனாக நடிப்பது என்பது தனுசுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அநாயசமாக நடித்துவிட்டு போகிறார். காதலியை பற்றி நண்பர்களிடம் புலம்புவதாகட்டும், குடித்துவிட்டு வந்து அப்பாவிடம் சிரித்துகொண்டே அடிவாங்குவதாகட்டும், அப்பாவை அடித்தவனை துவைத்து எடுத்துவிட்டு அவன் பிரபல ரவுடி என்று தெரிந்தும் கோபம் கொப்பளிக்க நண்பர்களிட்ம் உறுமுவதாகட்டும் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்.

கல்லூரி மாணவியாக, அழகு பதுமையாக வரும் ரம்யா, வழக்கம் போல் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்து, அதிக கவர்ச்சி காட்டிவிட்டு போகிறார். கருணாஸ், சந்தானம் கூட்டணியின் காமெடி பரவாயில்லை ரகம்.

வில்லன் கிஷோர் குமார் நிஜமாகவே மிரட்டுகிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் 'எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் பாடல் ரசிக்கவைக்கிறது. மலையாள முரளி, பானுப்ரியா ஆகியோரும் தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். ஆக்சன், காதல், காமெடி, சென்டிமெண்ட் கலந்து இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இயக்கி முதல்படத்திலேயே 'ஹிட்'டடித்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.


பஞ்ச்: பொல்லாதவன் - நல்லவன்

No comments: