Wednesday, January 2, 2008

மிருகம் - விமர்சனம்

மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!

கண்ணில் படும் பெண்களைக் கட்டிலுக்கு அழைக்கும் காமுகன். இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும் ஐயனார் (ஆதி) வாழ்வில் முட்கள் மிகுதியாகக் கொண்ட ரோஜாவாக நுழைகிறாள் அழகம்மா (பத்மபிரியா). மேனியை மட்டும் மேயும் நோக்கில் தன்னை மணம் முடித்துக் கொண்டதை உணர்ந்தும், ஐயனாரை மனிதனாக மாற்றுவதற்கு அழகம்மா முயற்சிக்கிறாள்.

அடங்காத ஐயனார் தனது கருமத்தை கைவிடாமல் செய்துகொண்டிருக்க, தனது சாகசங்களுக்குப் பரிசாக 'எய்ட்ஸ்' நோயைப் பெருகிறான். அதன்பின், அவன் வாழ்க்கை எவ்வாறு கடந்து முடிகிறது என்பதை அழுத்தமாகவும், அதிர்ச்சியளிக்கும் விதமாகவும் காட்டுகிறது 'மிருகம்'!

ஐயனார் என்ற பாத்திரத்தை, அவனருகில் இருந்து பார்ப்போருக்கு எவ்விதமான உணர்வுகள் ஏற்படுகிறதோ, அதே உணர்வை வெள்ளித்திரையில் பார்ப்போருக்கும் ஏற்படச் செய்திருப்பது இயக்குனரின் திறமைக்குச் சான்று. குறிப்பாக, அந்தப் பாத்திரத்துக்கு கச்சிதமான புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு.

படத்தின் ஆதி முதல் அந்தம் வரை அசத்தலாக நடித்துள்ளார், ஆதி. பனைமரம் ஏறும் மிடுக்கு, தன்னைச் சீண்டியவனைத் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டும் துணிவு, தனது குழந்தையைக் கொல்ல முயற்சிக்கும் கணவனின் நெஞ்சை மிதிக்கும் ரெளத்திரம், எவரும் தீண்டத் தயங்கும் நோயாளிக் கணவனிடம் காட்டும் கனிவு...

நடிப்புக் கலையில் பத்மபிரியாவின் அர்ப்பணிப்பு மிளிர்கிறது. ஐயனாரின் கையாளக வரும் கஞ்சா கருப்பு, ஆத்தாவாக வரும் குரண்டிலட்சுமி அம்மாள் மற்றும் அனைத்து துணைக் கதாப்பாத்திரங்களும் கதையோட்டம் இயல்பு மீறாமல் இருக்க துணைபுரிகின்றன.

கதைக்களத்தைச் சிறப்பாக பதிவு செய்திருக்கும் ராம்நாத் ஷெட்டியின்ஒளிப்பதிவு நேர்த்தியும், அதற்கேற்ற பிண்ணனி இசையை வழங்கியிருக்கும் சபேஷ்-முரளியின் இசையும் மிருகத்துக்கு வலு சேர்க்கின்றன.

மிருக வடிவிலான மனிதனின் கோரத்தைக் காட்டுவதற்கு, படத்தின் பாதி நீளத்தை எடுத்துக் கொண்டதில் தவறில்லை. ஆனால், அதைக் காட்டிய விதம்தான் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. "ஒரு கிராமத்தில் காலைக் கடனுக்காக வயலோரம் ஒதுங்குவது மிக இயல்பான ஒன்று. ஆனால், யதார்த்தம் என்ற பெயரில், அதை அப்படியே படச்சுருளுக்குள் கொண்டுவருதல் நல்லதல்ல" என்று இயக்குனர் மகேந்திரன் பேட்டி ஒன்றில் எப்போதோ குறிப்பிட்ட ஞாபகம். அவர் செய்யக்கூடாது என்றுச் சுட்டிக்காட்டியத் தவறையே 'மிருகம்' படத்தின் முதல் பாதியில் புரிந்திருக்கிறார், சாமி.

ஆனால், சமூகத்தால் சாதாரணமாகவே வெறுக்கப்படும் ஒரு நபருக்கு 'எய்ட்ஸ்' பாதித்தால், அவன் மீதி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பிற்பாதியின் மூலம் சொல்லப்பட்ட விதம், இயக்குனர் சாமியின் வல்லமையை வெளிப்படுத்துக்கிறது! மொத்தத்தில், ஓரளவு மிரட்டவே செய்கிறது 'மிருகம்'!

Punchline: Mirugam - Urugum!

No comments: