Thursday, December 6, 2007

'நேற்று இன்று நாளை'

'7G ரெயின்போ காலனி', 'கேடி' படங்களின் நாயகன் ரவி கிருஷ்ணா நடிக்கும் திரைப்படம்தான் 'நேற்று இன்று நாளை'.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனான இவர், 'சித்திரம் பேசுதடி' மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த புராஜெக்ட் கைவிடப்பட்டதால், 'நேற்று இன்று நாளை' படத்தில் முழுமூச்சாக இயங்கி வருகிறார்.

'ஹைதராபாத் நவாப்' என்ற தெலுங்கு வெற்றி படத்தை இயக்கிய லஷ்மி காந்த் என்பவரே, இப்படத்தை இயக்கி வருகிறார். தமிழில் இவர் இயக்கும் முதல் படம் இதுவே. இப்படத்தின் கதையிலேயே புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

நாயகனின் வாழ்க்கையில் 3 நாட்கள் நிகழும் சம்பவங்களை மட்டும் கொண்டதே, இப்படத்தின் கதையும் திரைக்கதையும். அதைத்தான் 'நேற்று இன்று நாளை' என்று சொல்கிறார்கள்! மொத்தம் மூன்று வெவ்வேறு 'கெட்டப்'களில் நாயகன் வலம் வரும் இப்படத்தில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தக்கூடிய காதல், அதிரடி, எதிர்பாராத திருப்பங்கள் போன்றவற்றுக்கு மிகுதியாக இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் இப்படக்குழுவினர் கூறுகின்றனர்.

சென்னை, ஹைதராபாத், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். குறைந்த நாளில் படத்தை முடிக்க திட்டமிட்டிருந்த இப்படக்குழு, மொத்தம் 30 நாட்களில் கிட்டத்தட்ட மொத்த படத்தையும் முடித்துவிட்டார்களாம். இன்னும் 10 சதவீத படம்தான் மீதமிருக்கிறதாம்.

இப்படத்தில் இரண்டு பேர் கதாநாயகிகளாக வலம் வருகின்றனர். அக் ஷரா மற்றும் தமண்ணா ஆகியோரே அந்த நாயகிகள்.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல் காட்சிகள் இடம்பெறுகிறதாம். 'கிரீடம்' படத்தில் நடித்த அஜய், இதில் வில்லனாக வருகிறார்.


'நேற்று இன்று நாளை' படக்குழு:

நடிகர், நடிகையர் : ரவி கிருஷ்ணா, அக் ஷரா, தமண்ணா, அஜய் மற்றும் பலர்.

ஒளிப்பதிவு - அருள் வின்சென்ட்

இசை - அணில்

பாடல்கள் - நா.முத்துக்குமார்

வசனம் - பிரசன்னகுமார்

இயக்கம் - லஷ்மிகாந்த்

தயாரிப்பு - சூர்யபிரகாஷ்ராவ்

No comments: