Monday, December 17, 2007

'எவனோ ஒருவன்' - விமர்சனம்

'எவனோ ஒருவன்' வேறு யாருமல்ல, நாம் தான்! நம் எல்லோருக்குள்ளும் உறங்கிகொண்டிருக்கும் 'ஒருவன்' பொங்கி எழுந்தால் என்னவாகும்? லஞ்சம், ஊழல் போன்ற சமூக அவலங்கள் பெருகிப்போன இன்றைய காலக்கட்டத்தில், அத்ற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கிறார் மாதவன். ஓரு கட்டத்தில், அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் ஒருவன் தட்டி எழுப்பப்பட, குளிர்பானத்துக்கு 2 ரூபாய் அதிகம் கேட்கும் கடையை நொறுக்குவதில் துவங்கி, தனி ஒரு ஆளாக அராஜகங்களை துவஷம் செய்கிறார்.

நம்மூரில் தான் நல்லதுக்கு கோப்பட்டாலும் ரவுடி முத்திரை குத்திவிடுவார்களே. அதுதான் நடக்கிறது படத்திலும். போலீசாருக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்?. மாதவனை தீவிரவாதி ரேஞ்சுக்கு சித்தரித்து, என்கவுண்டரில் போட்டுத்தள்ள தயாராகிறார்கள். 'ஒரு கட்டத்தில், இந்த சமூகமே அப்படித்தான். இதை மாற்ற முடியாது. நாம் தான் அதற்கு தகுந்தமாதிரி அனுசரித்து வாழ பழகிகொள்ள வேண்டும்' என்ற யதார்த்தம் புரிந்து, சராசரி மனிதனாக மாற மாதவன் முடிவு எடுக்கும்போது நெஞ்சை நெஞ்சை பதைபதைக்க வைக்கும் க்ளைமாக்ஸுடன் முடிகிறது படம்.

சமூக அவலங்களை காணும்போதெல்லாம் நம்மை அறியாமலேயே நமக்கும் கோபம் பொங்கும். அடித்து நொறுக்கி துவஷம் செய்துவிடும் அளவுக்கு கைகளும், மனசும் பரபரக்கும். ஆனால், யதார்த்தம், போலீஸ் பயம், அவமானம் மற்றும் பயம் போன்ற பல்வேறு காரணங்கள் கருதி, 'நமக்கென்ன வந்தது' என்ற ரீதியில் விலகிவிடுவோம். ஆனால், அப்படி விலகி போகாமல் நாமே களமிறங்கி, போராடி பிரச்சனை எதிர்கொள்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார் மாதவன். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒரு ஹீரோவை தட்டி எழுப்புகிறார்.

இன்றைய உலகின் யதார்த்தம் புரிந்த மனைவியாக சங்கீதா. கணவனின் நடவடிக்கைகள் கண்டு உள்ளுக்குள் பொருமும்போது அப்படியே நம் வீட்டு குடும்பத் தலைவி. ஹீரோவின் நியாயத்துக்கும், தனது கடமைக்கும் இடையே சிக்கிதவிக்கும் போலீஸ் அதிகாரியாக சீமான். அவர் பேசும் ஒவ்வொரும் வசனமும் நறுக். வசனமும் மாதவன் தானாம், சபாஷ்! 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற கருவை கையில் எடுத்து, அதை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் இயக்குனர் நிஷிகாந்தையும் பாராட்டியே ஆகவேண்டும்.

படத்துக்கு வசனத்துடன் சேர்ந்து கூடுதல் விறுவிறுப்பு கொடுப்பது சஞ்சய்யின் காமிரா. படம் முழுவதும் இசை மூலம் நெஞ்சை தட தடக்க வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். க்ளைமாக்ஸை போன்றே, திரைக்கதையையும் திடீர் திருப்பங்களுடன், 'எவனோ ஒருவன்', 'நமக்குள் ஒருவன்' என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கு!

No comments: