Monday, December 24, 2007

பில்லா - விமர்சனம்

பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிறான். ஓரு கட்டத்தில் டிஎஸ்பியுடன் நடக்கும் பயங்கர மோதலில் பில்லா கொல்லப்படுகிறான். ஆனாலும், அவனது ஒட்டுமொத்த கூட்டத்தையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பில்லா இறந்ததை மறைக்கிறர் டிஎஸ்பி.பில்லாவுக்கு பதிலாக அவனைப்போலவே இருக்கும் பிக்பாக்கெட் வேலுவை (இன்னொரு அஜித்) பில்லாவாக மாற்றுகிறார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக டிஎஸ்பி கொல்லப்பட, தான் பில்லா அல்ல, வேலு என்று உண்மையை கூறுகிறான். ஆனால் அதை நம்பாமல் போலீஸ் வேலுவை துரத்துகிறது. மறுபக்கம் பில்லாவாக நடித்து தங்களை ஏமாற்றிய வேலுவை தீர்த்துக்கட்ட முயலுகிறது கிரிமினல் கும்பல். இறுதியில், போலீஸ் அதிகாரி ஒருவரே அந்த கும்பலை இயக்கி கொண்டிருப்பதை அறியும் வேலு, தான் நிரபராதி என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பது கதை.

இந்தியில் முதலில் அமிதாப்பும், கடந்த ஆண்டு ஷாரூக்கும் ' டான்' என்ற பெயரில் நடித்து ஹிட்டடித்த படம். தமிழில் ரஜினி கலக்கிய படம் என்பதால் பில்லாவின் கதை, இந்திய பிரசித்தம். இதனாலேயே ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புகள் எகிறுவதும் நிஜம். ஆனால், அமிதாப், ரஜினி மற்றும் ஷாரூக் வரிசையில் இந்த எதிர்பார்ப்பை அஜித் பூர்த்தி செய்திருக்கிறாரா என்பது கேள்விக்குறி!.

எனினும், ரஜினி வேடத்தில் அஜித். ஸ்ரீப்ரியா வேடத்தில் நயன்தாரா. பாலாஜி வேடத்தில் பிரபு, மேஜர் சுந்தராஜன் வேடத்தில் ரகுமான் என காலத்துக்கு ஏற்ற வகையில் ஹை டெக் சமாச்சாரங்கள் என்று புதிய பில்லாவில் புகுந்து விளையாடியிருக்கின்றனர்.படம் முழுவது அஜித் ராஜ்யம். அழகாக, ஸ்டைலாக, கம்பீரமாக, மிடுக்காக இருக்கிறார். ஆனாலும், பில்லாவையும், வேலுவையும் வெவ்வேறு மானரிசங்களில் வித்தியாசப்படுத்தி காட்டுவதில் தடுமாறுகிறார்.

துப்பாக்கியுடன் எதிரில் நிற்கும் எதிரிகளை முதுகுக்கு பின்புறமிருப்து துப்பாக்கிகளை எடுத்து சுட்டுத்தள்ளும்போதும், கூட்டத்திலிருந்து தப்பிக்க நினைக்கும் கூட்டாளியை காருடன் எரித்துக் கொள்வதும், அவனது காதலி மீது கார் ஏற்றி கொலை செய்யும்போதும் 'தல'யின் கொடி பறக்கிறது.


படத்தில் ஆங்கில பட அளவுக்கு கவர்ச்சி, சாகசம், இறுக்கம் என கவனிக்க வைக்கிறார் நயன்தாரா. உயரமான கட்டடத்திலிருந்து கயிற்றில் தொங்கியபடி அவர் செய்யும் சாகசம் 'அட!' போட வைக்கிறது. 'நயன்' முன்னாள் 'பூஜ்யம்' ஆகிவிடுகிறார் நமீ. டி.எஸ்.பி. ஜெயப்பிரகாஷாக பிரபு விறுவிறுப்பாக வந்து போகிறார். அவரது முடிவு என்ன என்பது முன்கூட்டியே தெரிந்து விடுவதால், அவரது மரணம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.இறுதியில், போலீஸ் அதிகாரியான ரகுமான் தான் கடத்தல் கும்பல் தலைவன் என்று தெரிய வரும்போது அதிரடி திருப்பம்.

அஜீத்தை போலவே படத்தில் பாராட்டப்படகூடிய மற்றொரு அம்சம் நீரவ் ஷாவின் கேமிரா. ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை உணரவைப்பது இவரது கைவண்ணம்தான். யுவன் சங்கர் ராஜாவும் தன் பங்குக்கு ரீ மிக்ஸ் பாடல்களை சிறப்பாக செய்திருக்கிறார். முந்தைய ஒரிஜினல் பில்லா அளவுக்கு பரபரப்பு இல்லை என்றாலும், புதிய தொழிற்நுட்பங்கள் மூலம் படத்தை விறுவிறுப்பாக இயக்கியிருக்கும் விஷ்ணு வர்தனை பாராட்டியே ஆகவேண்டும்.

PunchLine: Billa - Cool la!

No comments: