இயக்குனர் மகேந்திரன் காலத்தில் சிறுகதைகளை, திரைக்கதையாக்கும் உத்தி சிறப்பாக கையாளப்பட்டது. அண்மையில் தங்கர்பச்சான் தனது 'ஒன்பது ரூபாய் நோட்டு'நாவலை படமாக்கினார். தற்போது இந்த உத்தியைக் கையாண்டு 'சொல்லாமலே' சசி, 'பூ' என்ற படத்தை இயக்குகிறார்.எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதை ஒன்றுக்கு திரைக்கதை, வசனம் எழுதி சசி இயக்கும் இந்தப் 'பூ'வை, மோஸர் பேயர் - நேசகி சினிமாஸ் தயாரிக்கிறது.மலர்ந்துகொண்டிருக்கும் இப்'பூ' குறித்து இயக்குனர் சசி கூறுகையில், மண்ணிற்கு விதையாய் புதைந்து கிடந்தாலும், நீரின்றி காய்ந்து கிடந்தாலும், புயல்காற்றில் ஒடிந்தே கிடந்தாலும், பூப்பதையே இயல்பாய்க் கொண்டிருக்கிற இரு மனிதப் பூக்களின் கதை என்று கவிதை நடையில் விளக்குகிறார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், கேரளத்தில் கவனத்தை ஈர்த்த 'நோட்புக்' படத்தில் நடித்த பார்வதி,நாயகியாக வலம் வருகிறார். திரைப்படக் கல்லூரியில் பயின்ற எஸ்.எஸ்.குமரன் இசையமைக்கும் இப்படத்துக்கு, கவிஞர் நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் தலைப்புக்கேற்றபடி கவிதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ரவி.கே.சந்திரன், ரவிவர்மன் உள்ளிட்டோரிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற பி.ஜி.முத்தையா, 'பூ'வைக் கேமராவுக்குள் கொண்டுவருகிறார்.
'பூ' படக்குழு
படத்தொகுப்பு : என்.பி.ஸ்ரீகாந்த்
கலை : கே.வீரசமர்
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இசை : எஸ்.எஸ்.குமரன்
பாடல்கள் : நா.முத்துகுமார்
தயாரிப்பு நிர்வாகம் : என்.நாகராஜன்
இயக்கம் : சசி
No comments:
Post a Comment