Wednesday, November 21, 2007

சிவி - சினிமா விமர்சனம்

நீண்ட நாளைக்கு பிறகு தமிழில் ஒரு பேய் படம்.

நிஜமாகவே ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்கள். நாயகன் யோகி ஒரு போட்டோகிராபர். அவரது காதலி ஜெயஸ்ரீ. இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். ஒருநாள் இரவில் இருவரும் காரில் செல்லும் போது ஒரு இளம்பெண் காரில் அடிபட்டு உயிரிழக்கிறார். இருவரும் பயத்தில் காரை கிளப்பிகொண்டு தப்பிவந்து விடுகின்றனர். மறுநாள் விசாரிக்கும்போது, அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்ற திகிலுடன் தொடங்குகிறது படம்.

படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறது காமிரா. ஆவிகள் தாங்கள் விரும்பும் இடத்திலேயே இருப்பதாகவும், தாங்கள் விரும்பும் நபரின் அருகிலேயே இருப்பதாகவும் ஒருவர் சொல்ல, அதன்படி, நாயகனும், நாயகியும் எடுக்கும் புகைப்படங்களில் ஆவியின் உருவம் பதிவாவது நம்மை சீட்டின் நுனிக்கு இழுத்து செல்லும் காட்சிகள்.

இப்படி ஆவிகள் பதிவாவதன் மூலம், அவை நம்மிடம் ஏதோ சொல்ல முயற்சிக்கின்றன என்று நிழல்கள் ரவி சொல்ல, அதன்படி அந்த ஆவி சொல்ல விரும்புவது என்ன என்று துப்பறிய கிளம்புகிறார் ஜெயஸ்ரீ.ஒரு கட்டத்தில் தனது காதலனுக்கும், ஆவிக்கும் ஏதோ தொடர்பிருப்பது தெரியவர, காதலனை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாகிறார். இறுதியில், தனது காதலனால் ஏமாற்றப்பட்டு, அவரது நண்பர்களால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட ஒரு இளம் பெண்தான், பழி வாங்குவதற்காக ஆவியாக அலைகிறார் என்பது தெரிய வருகிறது.

இறுதியில் யோகி என்னவாகிறார் என்பது யூகிக்க முடியாத திடுக் க்ளைமாக்ஸ். கதாநாயகனாக வரும் யோகியிடம் இளமை துள்ளுகிறது. முதலில் அப்பாவி போல் பயப்படும் போது பரிதாபத்தை அள்ளுகிறார், ஆனால், அவர்தான் நண்பர்கள் தனது முன்னாள் காதலியை வேட்டையாடும்போது, கூட இருந்தே புகைப்படம் எடுக்கும் கொடூரமானவராக மாறுகிறார்.

நாயகி ஜெயஸ்ரீ புஷ்டியாக அழகாக இருக்கிறார். கண்களை உறுத்தாத கவர்ச்சியில் கவர்கிறார். தனது காதலனை காப்பாற்ற போராடுவதும், இறுதியில் அவர்தான் எல்லாவற்றும் காரணம் என்று அறிந்து கண்ணீரோடு விலகுவதும் என்று மனதை கனக்க வைக்கிறார். நிழல்கள் ரவி, சிட்டி பாபு மற்றும் பாத்திமா பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பரிச்சயமில்லாதவை.

போட்டோகக்ளில் ஆவியின் உருவம் பதிவாவது, தண்ணீரிலிருந்து பெண்ணின் தலை மேலே எழும்புவது, ஏணிப்படிகளில் தலைகீழாக நாயகனை துரத்துவது என திகில் காட்சிகளில் ரொம்பவே மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் தரண். கதையின் போக்கில், யோகிக்கு தோள்பட்டையில் வலி ஏற்படுவதுபோல் காட்டி, இறுதியில் அவரது தோளிலேயே ஆவி நிரந்தரமாக ஏறி உட்கார்ந்திருப்பதுதான் காரணம் என்று முடிச்சை அவிழ்ப்பது இயக்குனருக்கு கிடைத்த சபாஷ்.

No comments: